Sunday, October 23, 2016

அiனு போக சுத்தி!

அனுபோக  சுத்தி என்பது சிவானுபவத்தால்  ஆன்மா தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளுதல்.

google image


ஈசனேஎன் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி
நாச னேநான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே.


ஈசனே ! என் தலைவனே! என் தந்தையுமாகிய பெருமானே! என் பிறவியை ஒழிப்பவனே! ஒரு சிறு பொருளுக்கும் நான் ஈடாக மாட்டேன். தீய நாயினைப் போன்ற இழிவுடையவனான நான் , உன்னை குறித்து நினைக்காதவனாயிருக்கிறேன்.
ஒளியுருவானவனே! திருவம்பலவாணனே! என்னுடைய நிலையை மாற்றி, உன் மேல் பக்தியுள்ளவனாய்  மாறுவதற்கு  என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றேன்.


செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யில்லா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே.


போர் செய்வதில் வல்லமையுடைய  ஆண் சிங்கத்தைப் போன்றவனே! பொய்யற்ற உண்மை அடியார்கள் , மணம் நிறைந்த தாமரை மலர் போன்ற உன் திருவடிகளை  அடைவதை, பொய்யுடையவனான நான்  கண்ணாரக் கண்டும்,  காதாரக் கேட்டும்,  இந்தப் பொய்யுலகத்தில் உண்டு உடுத்திருப்பதையே  பெரிதாக நினைத்துக் கொண்டிருந்து விட்டேன். ஆதலால் நாய் போன்ற கீழ்மையுடையவனான  நான் செய்வதறியாது திகைக்கின்றேன்.  செம்பொன் போன்ற உன் திருவடிகளைக்  காணாத  பொய்யர்கள் , அடையப் போகிற துன்பங்கள் அனைத்தையும் நானும் அடையப் போகிறேன் என்று எனக்குப் புரிகிறது.

போரே றேநின் பொன்நகர்வாய் நீபோந் தருளி இருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளோ டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டும் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே.


போர்  செய்வதில் வல்லமைப் பெற்ற ஆண் சிங்கம் போன்றவனே! உனது அழகிய சிவபுரத்தினின்று , இளமையும், மென்மையுமுள்ள தனங்களுயுடைய  உமாதேவியோடு  நீ எழுந்தருளி , அஞ்ஞான இருளை நீங்கி அருள செய்யவும், திருவருள் பெற்ற உன் சிறப்பு மிகுந்த அடியார்கள் உன் திருவடிகளை அடைவதை நான் நேரே பார்த்திருந்தேன். அப்படிப் பார்த்திருந்தும், உன் திருவடிகளை அடையாமல் , கண்ணையிழந்த ஊர்க்  காளைப் போல்  இவ்வுலகில் திரிந்துக் கொண்டிருக்கின்றேனே ! தீயவனான என் உயிர் போகுமா என்றால் அதுவும் நீங்கவில்லையே!

உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண் டெழுகேன் எம்மானே.


எம்பெருமானே! உன்னைக் காணும் பொருட்டு , மாமுனிவர்கள்  பலர் இவ்வுலகில் அளவிறந்த காலம் தவத்தை மேற்கொண்டு , உடம்பை ஒரு பொருட்டாக போற்றாது வெறுத்து, வருந்தி நிற்க , அவர்களை எல்லாம்  விட்டு விட்டுப்  பாவியாகிய என்னை  ஆட்கொண்டாயே! ( ஆட்கொண்ட பின் இவ்வுலகிலேயே விட்டு விட்டுப் போய் விட்டாயே)  மாணிக்கமே! உன்னைக் காணும் பொருட்டு ,  மாசு நிறைந்த என்னுடைய பெரிய உடலை  நான் மாய்த்துக் கொள்ளவுமில்லை.அது மட்டுமல்லாமல் உன்னைத் தேடி அலையும்  அன்பும் இல்லாதவனாயிருக்கிறேன். இனி நான் எந்நெறியைக் கொண்டு உயர்வேனோ!

மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்றன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே.


மான் போன்ற பார்வையுடையவளாகிய  உமாதேவியை  இடபாகத்தில்  கொண்டவனே!இவ்வுலகிலே
  வந்து என்னைஆட்கொண்டு அருளினாயே !
தேன் போன்றவனே! அமுதமே! கரும்பின் சுவை போன்றவனே! சிவனே! தெற்கேயுள்ள தில்லை நகர்க்கு இறைவனே! முதல்வனே!  உந்தன் திருவடிப்பாங்கினை  உணர்ந்தோர் எல்லாம் உன் திருவடியை வந்து சேர்ந்தனரே !நானோ,மாமிசம் பொருந்திய, புழு நிறைந்த கூடாகிய இவ்வுடம்பைப்  பாதுகாத்து இவ்வுலகிலேயே இருந்து விட்டேனே!

உடையா னேநின் றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே.

 
 முதல்வனே! உன்னையே நினைத்து , மனம் உருகுகின்ற  பேரன்புடைய  அடியார்கள் , எல்லாவற்றையும் உடைய நின் திருவடியை  சேர்வதை  நான் பார்த்தேன்.  நானோ, ஊரில் ஆதரவின்றி அலையும் நாயை விடக் கீழ்மையானவன். அதோடு இல்லாமல்,உன்னை நினைத்து
மனம் உருகாதவனும், கல்லை ஒத்த மனத்தையுடையவனும், மற்றும் உன்னை நினைத்து கசிந்து கண்ணீரும் விடாதவன். ஆகையால் புலால் நாற்றம் வீசும் , புழு நிறைந்த கூடாகிய இவ்வுடம்பைப் பாதுகாத்துக்  கொண்டு ,  இவ்வுலகிலேயே  நான் இருக்க வேண்டுமென்று முடிவு செய்து விட்டாயே!

முடித்த வாறும் என்றனக்கே தக்க தேமுன் அடியாரைப்
பிடித்த வாறும் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய்
துடித்த வாறும் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே.


 பெருங்காதலுடைய உன் அடியாரை தளர விடாமல் ,நீ முதலில் பிடித்து அழைத்துக் கொண்டதும் , என்னை இங்கேயே காத்திருக்க வைக்க நீ செய்த முடிவும் சரியானதே. ஏனென்றால் எனக்கு பெண்ணாசை இன்னும் நீங்கினபாடில்லை. ஒரு பெண் இதழ் துடிப்பதும், அவள் ஆடை சற்றே   நழுவுவதும் , அவளுக்கு முகத்தில் சிறிதே வியர்வை அரும்புவதும் , ஆகியன எல்லாம் என் பொருட்டே நிகழ்ந்தது என்று நினைத்து எனக்கு நானே கேடு விளைவித்துக் கொண்டேன்.

தேனைப் பாலைக் கன்னலின் தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை யுருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே அருளலாந் தன்மை யாமென் றன்மையே.



தேனை, பாலை, கரும்பின் சுவையை, ஒளிப்பிழம்பை,மனம் தெளிந்தவரது ஊனையும்  உருகச் செய்யும்  முதல்வனை,  சிவபுரத்து அரசனை   நோக்கி, வீணனாகிய நான், உன் அடியவன் என்றும், என்னை நீ ஆண்டு கொண்டாய் என்றும்  சொல்வது நகைப்புக்குரியதாகும் . உன் அருளுக்கு பாத்திரமாகும் தகுதி எனக்கில்லையாயினும் , நீ கருணைக் கொண்டு அருள் செய்வாய் .

தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ
என்னை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே.


யாராலும் அறியமுடியாது தன்மையை உடைய தலைவனே!  தீய
நாய் போன்ற என்னை ஆண்டு கொண்டு,பிறகு புறத்தே செல்ல விடுவாயோ? நீயே என்னை   புறம் போகச் செய்தால் என்னை யார் பார்த்துக் கொள்வார்? நான் என்ன செய்வேன்? எம்பெருமானே! பொன்னைப் போல்
விளங்கும் திருமேனி கொண்ட எந்தையே!  நான் எங்கு அடைக்கலம் புகுவேன்?

புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி நாண மில்லா நாயினேன்
நெகுமன் பில்லை நினைக்காண நீஆண்டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.


என் தந்தையே !  வெட்கம் இல்லாத நாய் போன்றவனாகிய நான் , என்னை நீ ,ஆண்டு கொண்ட நாளில் உன்னை வணங்கும் அடியார் நடுவில் நின்று , உன் திருத் தோள்களின் அழகைக் கண்டு மகிழ்ந்ததைத் தவிர  வேறொன்றும் செய்திலேன்.உன்னைக் காண்பதற்கு  உள்ளம் உருகுகின்ற அன்பெல்லாம்  எனக்கில்லை. ஆதலால் நீ என்னை ஆண்டு கொள்ள நான் தகுதியுடையவனோ? ஆயினும் என்னை நீ ஆண்டு கொண்டாயே!  அந்தோ!என்னுடைய  தன்மையை  என்னால் பொறுக்க முடியவில்லையே!
உன் திருவடி என்னுடையதே ! நான் அதை சேர்வேனே!

                                                  திருச்சிற்றம்பலம் !


No comments:

Post a Comment