Tuesday, October 25, 2016

காருணியத்து இரங்கல் !

காருண்யத்து இரங்கல் என்பது இறைவன் கருணையை நினைத்து மனம் நெகிழ்ச்சி அடைவதாகும் .

google image


தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி.


உடலோடு கூடிய இவ்வாழ்க்கையை  இனி நான் பொறுக்க மாட்டேன் இறைவா!  சங்கரா போற்றி!
விண்ணுலகில் உறையும் பழையோனே போற்றி!.
எங்கள் விடலையே  போற்றி!
நிகரற்ற ஒருவனே போற்றி! தேவர் தலைவனே போற்றி!
தில்லையில் நடம் புரிவோனே போற்றி!
எங்கள் தூயோனே போற்றி! போற்றி !


போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி.


 ஓம் நமச்சிவாய போற்றி! பாம்பு அணிந்தவனே  உலக மாயையில் மயங்குகிறேன் .(அதை நீக்குவாயாக)
ஓம் நமச்சிவாய போற்றி! (உன் திருவடியைத் தவிர )அடியேன் சென்று அடைக்கலம் புகுதற்குரிய இடம் வேறொன்றில்லை.  ஓம் நமச்சிவாய போற்றி! அடியேனைப் புறத்தே விடாதே.
ஓம் நமச்சிவாய போற்றி! உனக்கு வெற்றி! வெற்றி !

போற்றிஎன் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றிநின் கருணை வெள்ளப் புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவு ளானே.


நிலம் , நீர், தீ,  காற்று, வானம் , இரு சுடர்களாகிய சூரியன், சந்திரன்  ஆகியவற்றை  உருவமாக உடைய இறைவனே! என்னைப் போல  பொய்யனையும்   ஆட்கொள்ளும் ஈகைக் குணம் கொண்டவனே போற்றி!
நின் திருவடிகள்  போற்றி! நாதனே போற்றி! புத்தம் புதுத் தேனைப் போன்ற  சுவையுடைய  உன் அருள் வெள்ளம் போற்றி !

கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.


எல்லாவற்றையும் கடந்து நிற்பவனே போற்றி ! என்னைக் கண் பார்த்து இரங்குக போற்றி ! உலகப்பற்றை நான் விடுவதற்கு, என் உள்ளத்தை நின் பால் அன்பு கொண்டு உருக செய்து ,ஆட்கொண்டருள வேண்டும்.
போற்றி! இந்த உடலினை  நீக்கி, விரைவாக மேல் உலகமாகிய  முக்தியினைத் தந்தருள்வாயாக  போற்றி! சடையுள் கங்கையை ஏற்றுக் கொண்ட சங்கரா  போற்றி !போற்றி!

சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி
இங்கிவாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே.


சங்கரா போற்றி ! வேறோர் புகலிடம் எனக்கில்லையே  போற்றி! சீறுகிற  
பாம்பின் அழகானப் படம் போன்ற அல்குலையும், சிவந்த இதழையும்,மிகவும் வெண்மையான பற்களையும், வாளை ஒத்த கரிய கூர்மையான  கண்களையும் உடைய மங்கையான உமையை ஒரு பாகத்தில் வைத்துள்ளவனே  போற்றி! பெரிய இடபத்தை  ஊர்தியாகக் கொண்டவனே போற்றி! இப்பொய் வாழ்கையை என்னால்   பொறுக்க முடியவில்லையே! இவ்வாழ்க்கையை நான் வெறுக்கிறேனே! (ஆகவே என்னை விரைந்து அழைத்துக் கொள்வாயாக!)

இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர்நாட் டெம்பி ரானே.


என்னை நானே இழிவு படுத்திக் கொண்டேன், எம்பெருமானேபோற்றி.
அதற்கு உன்னை நான் குறை கூறவில்லை.என்னை ஆண்டு கொண்ட உன் திருவடிகள் போற்றி! சிறியவர் செய்த பிழைகளை எல்லாம் பொறுப்பது  பெரியவரது  கடமையாகும் , இறைவா போற்றி! ஆதலால் என் வாழ்க்கையை  ஒழித்தருள்வாய்,  மேலுலகத்தையுடைய  எம்பிரானே! போற்றி !

எம்பிரான் போற்றி வானத் தவரவ ரேறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி.


எம்பிரான் போற்றி! வானவர்களாகிய தேவர்களுக்கு  ஆண் சிங்கம் போன்றவனே  போற்றி!  பூந்கொம்பு போன்ற இடையுடைய உமா தேவியை  ஒரு பாகத்தில்  கொண்டவனும்  திருவெண்ணீற்றை  அணிந்தவனுமே , போற்றி! செந்நிற மேனி கொண்டவனே போற்றி ! தில்லையின் பொன்னம்பலத்தில்  திகழ்பவனே  போற்றி ! மேன்மை பொருந்திய முக்தி உலகத்தை உடையவனே  போற்றி! என்னை ஆண்டு கொள்பவனே போற்றி!

ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே.


தனி முதல்வனே போற்றி! யாருக்கும் நிகரில்லா என் அப்பனே போற்றி! தேவர்களுக்கெல்லாம் குருவானவனே போற்றி! எங்களுடைய  அழகிய  சோதியே  போற்றி ! 'என்னிடம் வருவாயாக' என்று என்னை உன்னிடம்  அழைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் . துனையில்லாதவனாகிய  என்னுடைய  தனிமையை நீக்கி, உன்னுடைய திருவடித்  துணையைத்  தருவாயாக போற்றி!

தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி
பேர்ந்துஎன் பொய்ம்மை ஆட்கொண் டருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதம்ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி.


முதிர்ந்த அன்புடைய  அடியாரிடத்தே,  அவரகளைக்  காட்டிலும்  மிகுந்த அன்புடையவனே போற்றி !  என் பொய்மை நீங்க, என்னை ஆட்கொண்டருளும் நின் பெருந்தன்மைக்குப் போற்றி.  பாற்கடலில் விரவி நின்ற நஞ்சை  உண்டு,  தேவர்களுக்கு  அமுதத்தைக்  கொடுத்த வள்ளலே போற்றி ! எங்கும் நிறைந்த உன் திருவடியை, நாயின் தன்மையுடைய  சிறியேனுக்கு  அருளிட வேண்டும் போற்றி!

போற்றிஇப் புவனம் நீர்தீக் காலொடு வான மானாய்
போற்றிஎவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றியெல் லாவு யிர்க்கும் ஈறாய்ஈ றின்மை யானாய்
போற்றிஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே.


இந்நிலம், நீர், நெருப்பு,காற்று ,மற்றும் விண்ணும் ஆனாய் போற்றி! பிறப்பில்லாதவனான நீ எவ்வகை உயிரும் தோன்றுவதற்கும் காரணமானவனே போற்றி! முடிவில்லாதவனான நீ எல்லா உயிர்களும் வந்து ஒடுங்கும் இடமானாய் போற்றி ! ஐம்புலன்களும் உன்னைப்  பற்றாத  நிலையுடையவனே போற்றி!

                                                      
   திருச்சிற்றம்பலம் !

1 comment:

  1. சிவாயநம. அற்புதம். எல்லா பாடகளுக்கும் விளக்கம் தரவும்

    ReplyDelete