Thursday, October 13, 2016

கைம்மாறு கொடுத்தல் !

கைம்மாறு கொடுத்தல் என்பது ஒருவர் செய்த உதவிக்கு பிரதியுபகாரம் செய்வதாகும்.

google image



இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.



தேவர்களுக்கெல்லாம்  தலைவனே! நானோ இரண்டு கைகளையுடைய யானையைப் போன்றவன். ( யானைக்குத் கையிருந்தாலும் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது என்கிற கருத்தை நினைவில் கொள்ள வேண்டும்.). என் மனதிற்குள் இருக்கும் மூலப் பொருளாகிய  உன்னை (இறைவனை) நான் பார்க்காமல், வெறும் துன்பத்திலேயே  உழன்றுக் கொண்டிருந்தேன். நான் இப்படியிருந்தாலும்  என்னை 'சிவலோகத்திற்கு போகலாம் வா' என்று கட்டளையிட்டாய்.  அந்த அற்புத வாய்ப்பை இழந்து விட்டு இந்த உலக போகங்களிலேயே  சூழன்றுக் கொண்டிருக்கிறேனே !

உண்டொர் ஒண்பொருள் என்றுணர் வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி என்றறி யொண்கிலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே.


அறிவொளியான பரம்பொருள் உண்டென்று  உணர்ந்து   கொண்டவர்களே, நீ ஆணா, பெண்ணா , அலியா என்று அறியாமல்   இருக்கிறார்கள்.  நீ யார் என்பதை அவர்களுக்கே  இன்னும்   தெரியப்படுத்தாமல் இருக்கிறாய்.  ஆனால், பரம்பொருளை பற்றி எதுவும் அறிந்திராத அடியேனுக்கு, உள்ளபடியே வந்து காட்சி தந்தாய்.  உன் திருவடிக் காட்சி கிடைத்தும்,  உன் அருளை அனுபவிக்கும் பாக்கியத்தை  நழுவ விட்டு விட்டேனே. இது என் கண்  செய்த மாயமேயன்றி வேறொன்றுமில்லை.

மேலை வானவ ரும்அறி யாததோர்
கோல மேஎனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேஇவை வந்துபோங்
கால மேஉனை என்றுகொல் காண்பதே.


மேலுலகத்திலுள்ள  வானவர்களும்  அறிந்து  கொள்ள முடியாதத்  திருவுருவனே!  மிக்கத் தாழ்மையுடைய , எளியேனை ஆட்கொண்ட  கூத்தனே! விண்ணும், மண்ணும் தோன்றுவதற்கும்,  மறைவதற்குமுரிய  காலத்தை தீர்மானிக்கும்  காலத்தத்துவமே!.
உன்னை மீண்டும் நான் காண்பது தான் எப்போது?


காண லாம்பர மேகட் கிறந்ததோர்
வாணி லாப்பொரு ளேஇங்கொர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாறறி யேன்புலன் போற்றியே.


அன்பர்களின் (ஞானக்) கண்ணிற்குத்  தென்படும்  பரம் பொருளே! ஆனால் அவர்களின்  (ஊணக் )  கன் பார்வையைக் கடந்தாகிய பேரொளி நிலைத்தவனே! ( அடி, முடிக் காணக் கிடைக்காதக் கதை நினைவுக் கூறல் வேண்டும்). வீணனாகிய நான்  ஐம்புலன்களால்  உணரக் கூடிய இன்பங்களை முக்கியமாகக் கருதி இவ்வுலகிலேயே இருக்கின்றேன்.
வளர்ச்சியுற்றப் பறவைக் குஞ்சு முட்டையை விட்டு சரியான நேரத்தில்  வெளியே வருவது போல் , நானும், இப்பொய்யுடம்பை விட்டு விட்டு மெய்யாகிய உன்னையடைய வேண்டும். அந்நெறியை நான் அறியவில்லையே!

போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்
னாற்றல் மிக்கஅன் பால்அழைக் கின்றிலேன்
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாள்உறுங்
கூற்ற மன்னதொர் கொள்கைஎன் கொள்கையே.


 உன்னைப்  போற்றியும், நிலத்தில் விழுந்துப் புரண்டும், உன்னைப்புகழ்ந்து பாடியும்,  நின் தொண்டில் நிலைத்து நின்று , ஆற்றல் மிகுந்த பேரன்பால் உன்னை  கூப்பிடும் ஆற்றல்  இல்லாதவனாயிருக்கிறேன். ஆனால், எனது கொள்கையானது  எப்படி இருக்கிறது என்றால், உன்னை எதிர்த்து வந்து
இறுதியில் உன் தாமரைப் போன்ற  தாள்களை  அடைந்த எமனின் கொள்கை தான் என்னுடையதும் ஆகும்.( மார்க்கண்டேயனின்  கதை நினைவில் கொள்க )

கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே.


தேனும், வண்டும்  நீங்காத கொன்றை மலர்களை அணிந்தவனும் , எள்ளும் எண்ணெயும் இருப்பது போல் எல்லாப் பொருள்களிலும், நடுவிலும், கீழேயும் , மேலேயும் ,  நிறைந்திருக்கின்றான் என் அப்பனாகிய இறைவன் . அவன் மேல் அன்பில்லாதவனாய் நான் இருக்கின்றேன். ஆனால், என்னையும்  அவனுடைய  தொண்டருக்கு  இணையாக  நினைத்து, என்னை வலிய அழைத்து  அவனுடைய அடிமையாக  ஆக்கிக் கொள்ளும் திறனுடையவன் என் இறைவன்.

எந்தை யாய்எம்பி ரான்மற்றும் யாவர்க்குந்
தந்தை தாய்தம்பி ரான்தனக் கஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.


எனக்குத் தந்தையும், தாயும், தலைவனாய்  இருப்பது போல் எல்லோருக்கும், தந்தையும், தாயும், தலைவனுமாய் இருக்கின்றான் என் இறைவன். ஆனால் அவனுக்குத் தந்தை, தாய், தலைவன் என்று யாருமில்லை. எல்லோரும் மனதால் அறிவதற்கு அருமையாகிய பேரானந்த செல்வத்தைத் தன்னகத்தே உடையவன், தானே முற்பட்டு, என் மனதுள் புகுந்துஅருளினான்.

செல்வ நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே.


செல்வம், வறுமை என்கிற நிலை வேறுபாடுகள் இல்லாமல், தேவர், புழு, புல் என்று பிறப்பு வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் அறிவதற்கு  அருமையானவன் பரம்பொருளாகிய இறைவன்.  அப்படிப்பட்ட இறைவனின்  எல்லையில்லாத மேன்மையுடைய  திருவடிகளைக் கண்ட பின்பும், திருவடிகளை அடையாமல் பிரிந்து விட்டேனே.  அப்படிப்பட்ட கல் போன்ற மனதை கொண்டவனாய் நான் இருப்பது துன்பமே!

கட்ட றுத்தெனை ஆண்டுகண் ணாரநீ
றிட்ட அன்பரொ டியாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண்டும்அறி யேனையே.


இடப வாகனத்தையுடைய நீ, என் பாசங்களை அழித்து, என்னை அடிமைக் கொண்டாய்.  சிவம், சக்தி இவைகளைப் பற்றியும்  ஒன்றும் அறியாதவான் நான் . ஆனால், திருநீறணிந்த உன் அடியாரோடு  அடியாராய் என்னையும்  சேர்த்து,  இடம்  அகன்றதாய் இருக்கின்ற உன் திருல்லோக்க மண்டபத்தில்
 ஏறச் செய்தாயே!

(எட்டும், இரண்டும் விளக்கம்: எண் எட்டு தமிழில் ' அ" . இரண்டு 'உ'.
அகரம் -சிவம், உகரம் - சக்தி.)

அறிவ னேஅமு தேஅடி நாயினேன்
அறிவ னாகக்கொண்ட டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅருள் ஈசனே.


 முற்றறிவுடையவனே ! அமிர்தமே ! அன்றொரு  நாள் என்னை நீ ஆட்கொண்டாயே! நாயைப் போன்ற அடிமையாகிய நான் உன் உபதேசத்தைக் கேட்பேன்  என்று தானே என்னை ஆட்கொண்டாய். ஆனால் நீ  அப்போது கண்டது என் அறிவில்லாமையைத் தானே  .  உன் உபதேசத்தை கேட்டு நான் உன்னையடைந்தால் அது உன் அருளால் தான். உன்னையடையும் வழியை நான் உணராமல் போனாலும், அதுவும் உன் அருளே!

                                            திருச்சிற்றம்பலம்! 

No comments:

Post a Comment